செலவுமிக்க பதிவுச் செயல்முறையால் வளர்ப்பு நாய்களை கைவிடும் மக்கள் - நாடாளுமன்றில் தகவல்
கிராமப்புற சமூகங்களில், ஏழை எளிய மக்கள் வீடுகளுக்குக் காவலாக இருக்கும் வளர்ப்பு நாய்களைப் பராமரித்து வருகின்றனர், பதிவுச் செயல்முறை செலவுமிக்கதாகவோ அல்லது அணுக முடியாததாகவோ இருந்தால் தண்டப் பணத்தைத் தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் நாய்களை வீதிகளில் கைவிட்டுவிடுவர் என நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (23.10.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெறிநாய்க்கடி பரவுவதைத் தடுக்க வேண்டுமெனில் நாய்களின் தொகையில் குறைந்தபட்சம் 70 வீதத்திற்கு தொடர்ச்சியான தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. ஆகவே, குழு நிலை விவாதத்தின் பொழுது இதனோடு தொடர்புடைய அமைச்சர் இதற்கானதொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை முன் வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சட்ட மூலத்தின் நான்காம் பிரிவில் திருத்தம்
அறுவை சிகிச்சை மூலமான கருத்தடை, வணிக அடிப்படையிலான இனப்பெருக்கம் மற்றும் மருத்துவப் பராமரிப்புக்கு கால்நடை மருத்துவர்களின் நேரடி மேற்பார்வை தொடரட்டும். அதேசமயம், வழக்கமான சமூக மட்டத்திலான தடுப்பூசி முகாங்களை சுகாதார மருத்துவ அதிகாரிகளின் (MOH) மேற்பார்வையின் கீழ்ப் பயிற்சி பெற்ற பொதுச் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் சட்ட மூலத்தின் நான்காம் பிரிவில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாட்டின் உள்ளூராட்சி மன்றங்கள் மீது சுமத்தப்படும் நிதிச் சுமையையும் நாம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டமூலமானது, மாநகராட்சி மன்றங்கள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றுக்குக் கருத்தடைத் திட்டங்களை நிருவகித்தல், விலங்குப் பராமரிப்பு நிலையங்களை நடத்துதல், வணிக வளர்ப்பாளர்களுக்கு உரிமம் வழங்குதல், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாய்க் கணக்கெடுப்பு நடத்துதல் முதலிய கடமைகளை வழங்குகின்றது. இருப்பினும், இந்தக் கடமைகளைச் செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு எதையும் இந்தச் சட்ட மூலம் வழங்கவில்லை.
உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போதுமான நிதி உதவி வழங்காமல் இந்தச் சட்டக் கடமைகளை அவற்றின் மீது திணிப்பது, நிதி ஆதாரமற்ற நிலையை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக பிரதேச சபைகளால் கருத்தடை மற்றும் தடுப்பூசித் திட்டங்களை முறையாகப் பராமரிக்க முடியாமல் போய்விடும். எனவே, நாடு முழுவதும் சீரான செயலாக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின், உள்ளூராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி வழங்கலுக்கு ஆதரவளிக்க ஒரு தனியான தேசிய வெறிநாய்க்கடி ஒழிப்பு நிதியத்தை (National Rabies Elimination Fund) நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மீது ஏற்படும் சமூக - பொருளாதார தாக்கத்தையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தச் சட்ட மூலம் உரிய காலத்தில் நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் 2,000 ரூபாய் தாமத தண்டப் பணத்தை விதிக்கிறது. கிராமப்புற சமூகங்களில், ஏழை எளிய மக்கள் வீடுகளுக்குக் காவலாக இருக்கும் வளர்ப்பு நாய்களைப் பராமரித்து வருகின்றனர். பதிவுச் செயல்முறை செலவுமிக்கதாகவோ அல்லது அணுக முடியாததாகவோ இருந்தால்; தண்டப் பணத்தைத் தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் நாய்களை வீதிகளில் கைவிட்டுவிடுவர்.
தொடக்கப் பதிவுக் கட்டணங்கள்
விலங்குகளைக் கைவிடுவது இந்தச் சட்ட மூலத்தின் கீழ் குற்றம் ஆக்கப்பட்டிருந்தாலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அணுகக்கூடிய வகையில் இலவசப் பதிவு மற்றும் தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தாமல் அவர்களைத் தண்டிப்பது தெருநாய்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, சட்டம் நடைமுறைக்கு வரும் பொழுது முதல் ஆறு மாத காலத்திற்கு தண்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தொடக்கப் பதிவுக் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கவும் வேண்டும்.

இறுதியாக, 22 ஆம் பிரிவின் கீழ் உள்ள செயலாக்க அதிகாரங் களைப் பொறுத்தவரை; அதிகாரிகளுக்கு வளாகங்களுக்குச் செல்லும் அதிகாரம், வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்யும் அதிகாரம், உயிரியல் மாதிரிகளைச் சேகரிக்கும் அதிகாரம், சொத்துக்களைக் கைப்பற்றும் அதிகாரம் ஆகிய அனைத்தும் தெளிவான வழிகாட்டுதல்களின் கீழ் மேற்கொள்ள வேண்டும். மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, இந்த வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவுச் சட்ட மூலமானது ஓர் இன்றி அமையாத சட்டமாகும்.
இது காலத்துக்கு ஒவ்வாத காலனித்துவச் சட்டங்களை மாற்றி, மனிதநேயமிக்க தெருநாய்கள் மேலாண்மையை அறிமுகப்படுத்தி, வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கான கட்டமைப்புச் சூழலை வழங்குகிறது. இருப்பினும், இந்தச் சட்ட இலக்குகள் வெற்றிகரமாக எட்டப் படுவதை உறுதி செய்ய, குழு நிலை விவாதத்தின் பொழுது நாடாளுமன்றம் இதன் விதிகளைச் செம்மைப்படுத்த வேண்டும்.
நடைமுறைச் சாத்தியமான பொதுச் சுகாதார மாதிரியின் மூலம் 4ஆம் பிரிவில் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான நிதி ஆதரவை உறுதி செய்ய வேண்டும். இந்த இலக்கோடு கூடிய திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம், இலங்கையின் பொதுச் சுகாதாரத்தையும் விலங்கு நலனையும் பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த சட்டத்தை இந்த நாடாளுமன்றத்தால் இயற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.