வடக்கில் சிறுபோக நெற்செய்கையில் எதிர்பார்க்கப்படும் அதி உச்ச விளைச்சல்
வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையின் ஊடாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது என வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும், 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல், இதுவே வடக்கு மாகாணத்தில் சிறுபோகமொன்றில் எதிர்பார்க்கப்படும் அதி உச்ச விளைச்சலாகும்.
மாகாண விவசாய அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சிறுபோக உத்தேச இலக்குகளின் பிரகாரம், இம்முறை மாகாணம் முழுவதும் மொத்தமாக 39,215 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஊடாக ஒட்டுமொத்த மாகாண ரீதியிலான நெல் உற்பத்தித்திறனானது ஹெக்டேயருக்கு 4.4 மெட்ரிக் தொன்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
சாதகமான காலநிலை
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி மூலங்களின் ஊடாகக் குளங்களைப் புனரமைப்புச் செய்தமையும் இந்த அதி உச்ச விளைச்சல் இலக்கு சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாணத்திலேயே அதிகபட்சமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 13,805 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஹெக்டேயருக்கு 4.5 மெட்ரிக் தொன் உற்பத்தித்திறன் அடிப்படையில் 62,123 மெட்ரிக் தொன் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் 12,523 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டு 56,354 மெட்ரிக் தொன் விளைச்சலும், வவுனியா மாவட்டத்தில் 8,601 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 34,404 மெட்ரிக் தொன் விளைச்சலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் 4,286 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மாகாணத்திலேயே அதிகபட்ச உற்பத்தித்திறனாக ஹெக்டேயருக்கு 5.0 மெட்ரிக் தொன் அடிப்படையில் அங்கு 21,430 மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் சாதகமான காலநிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த அளவீடுகளிலும் நெற்செய்கைப் பரப்பளவிலும் எதிர்காலத்தில் மேலும் சாதகமான திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.