வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வியாபாரிகளுக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை இருநூற்று அறுபத்தைந்து (265) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மற்றும் இறுநூறு (200) அன்டிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றதாகச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வர்த்தகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏனைய வர்த்தகர்களையும், பொது மக்களையும் பாதுகாக்கும் வகையில் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான வியாபாரிகள் வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் மற்றும் வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகாரி வைத்தியர் ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில், வியாபாரிகள் நூறு (100) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் முப்பத்தைந்து (35) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் வியாபாரிகள் நூறு (100) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் தொண்ணூறு (90) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் வியாபாரிகள் நூற்று நாற்பது (140) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித், வைத்தியர்கள், பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதிக் குறித்த செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் காணப்படுவதுடன், வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுக் காணப்படுகின்றது.