வடக்குக்கு அனுப்பப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய இரசாயனங்கள்
பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய இரசாயனப் பொருட்கள் விரைவில் வடக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய இரசாயனப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சோதனை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இரசாயனப் பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது,
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டார். "இரசாயனப்பொருள் தட்டுப்பாடு தொடர்பில் எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அங்கு மருத்துவபீட சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. போதனா மருத்துவமனை சோதனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் மற்றும் கொழும்புக்கும் அங்கிருந்து மாதிரிகள் அனுப்பப்படுகின்றன.
சோதனைக்குரிய இரசாயனப் பொருள்கள் விரைவில்
அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர்
குறிப்பிட்டார்.