வவுனியா பொது வைத்தியசாலையில் நாளை முதல் பி.சீ.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம்
வவுனியா பொது வைத்தியசாலையில் நாளை (11.02.2022) வெள்ளிக்கிழமை முதல் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் பி.சீ.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிற்கு அனுப்பப்பட்டு, அதற்குரிய முடிவுகள் பெறப்பட்டு வந்தன.
கடந்த ஆவணி மாதமளவில் மத்திய அரசினால் வவுனியா வைத்தியசாலைக்கு 35 மில்லியன் ரூபா பெறுமதியான பிசீஆர் ஆய்வுகூட தொகுதியானது கொள்கையளவில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் தீவிர முயற்சியின் பலனாக அதற்கு தேவையான உபகரணங்கள் ஒவ்வொன்றாக தருவிக்கப்பட்டு நாளை (11.02) வெள்ளிக்கிழமை முதல் வவுனியா பொது வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்ட போது, மத்திய அரசினால் பிசீஆர் ஆய்வுகூடம் வழங்கி வைக்கப்பட்டிருப்பதன் மூலமாக வவுனியா மற்றும் வடமாகணத்தின் மற்றைய மாவட்டங்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களிலே உயிரிழந்தவர்கள் மீதான பிசீஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பிசீஆர் பரிசோதனைகள் யாழ்.போதனா மருத்துவமனை அல்லது அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்ததுடன், அவ் முடிவுகள் பெறுவதற்கு பெரும் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக வைத்திய குழாம், நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் அசௌகரியங்களிற்கு உள்ளாகியிருந்தனர்.
இதனை கருத்திற்கொண்டு வவுனியா பொது வைத்தியசாலையின் பிசீஆர் ஆய்வுகூடமூடாக முதற்கட்ட பணியாக உயிரிழந்தவர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகளினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதோடு, தீவிர நோயாளிகளிற்கான பிசீஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஆய்வுகூட தொகுதியை வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் இயங்கு
நிலைக்கு கொண்டுவர உதவிய மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார
திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்த அவர் பிரதி சுகாதார சேவைகள்
பணிப்பாளர் (ஆய்வுகூடம்) வைத்தியர் சுதத் தர்மாரட்ண அவர்கட்கும் தனது விசேட
நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



