வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 186 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும், 30 அன்டிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றதாகச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து ஆறு நபருக்கும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிண்ணையடி பகுதியில் ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறவினர்கள், நெருங்கிய உறவினர்கள், இவர்களுடன் பழகியவர்கள் மற்றும் கொரோனா தொற்றுள்ள பிரதேசங்களுக்குச் சென்று வந்த நபர்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் 125 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் 30 அன்டிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளன.
அத்தோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகாரி வைத்தியர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் 20 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் 41 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் வைத்தியர்கள், பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அண்மையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா அடையாளம் காணப்பட்ட நிலையில் இவரது குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் மேற்படி நபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதால் மூன்று வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையால் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.