சிறுநீரக நோயாளிகள் அதிகரிப்பிற்கு குடிநீரே காரணம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெலி ஓயா, மாந்தை கிழக்கு. துனுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகரித்த சிறுநீரக நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் இங்குள்ள நிலத்தடி நீரில் காணப்படுகின்ற பார உலோகங்கள் என்றும் சுகாதார தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிக்கும் சிறுநீரக நோயாளிகள்
2021 ஆம் ஆண்டுக்கான மாவட்டச் செயலக புள்ளிவிபர தகவல்களின படி முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்த சிறுநீரக நோயாளிகளில் வெலிஓயாவில் 1.83 வீத மக்களும்,மாந்தை கிழக்கில் 1.60 வீத மக்களுக்கும், துனுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 1.00 வீதமான மக்களுக்கும் சிறு நீரக நோய் காணப்படுகிறது.
இதனை தவிர புதுகுடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 0.51 வீத மக்களுக்கும்,கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 0.14 வீத மக்களுக்கும்,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 0.07 வீதமான மக்களுக்கும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நீரில் அதிகரித்துள்ள பார உலோகங்கள்
இதில் வெலிஓயா, மாந்தை கிழக்கு, துனுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள நிலத்தடி நீரில் காணப்படுகின்ற அதிகரித்த பார உலோகங்கள் காரணமாகவே மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாராந்தம், மாதாந்தம் யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு கடும் சிரமங்களுக்கு மத்தியில் குருதி சுத்திகரிப்பு சிகிச்சைக்கு சென்று வருகின்றனர் என்றும் சுாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இப் பிரதேசங்களில் சிறுநீரக நோய்களில் பாதிக்கப்படும் மக்களை இந்நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் மக்கள் குடிப்பதற்கு உகந்த நீரை வழங்க வேண்டும் என்றும் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.