போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் அடிப்படை உரிமைகள் மனு ஒத்திவைப்பு
பௌத்தம் மற்றும் பிற மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மே 26 அன்று தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, குற்றப் புலனாய்வுத்துறை தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு அவர் கோரியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
இந்த அடிப்படை உரிமைமீறல் மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸார் அதிபர், கண்காணிப்பாளர் உட்பட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைது செய்வதற்கான முயற்சி, சட்டவிரோதமானது எனக்கூறியுள்ள போதகர், தனது கருத்துக்கள் நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மே 14 அன்று அவர் சிங்கப்பூருக்குச் சென்றார்.
எனினும், ஜெரோம் பெர்னாண்டோ தீவு நாடு திரும்பியதும் கைது செய்யப்படலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிங்கப்பூரில் இருந்தபோது, போதகர் பெர்னாண்டோ பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |