தொடருந்துகளில் பயணச்சீட்டு வழங்காமல் பயணிகள் ஏற்றிச்செல்லப்படுவர் - அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை
தொடருந்து கட்டணங்களை நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்நிலையில், பயணச்சீட்டு விலை அதிகரித்தால் பயணச்சீட்டு வழங்காமல் மக்களை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தொடருந்து திணைக்களத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தொடருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரித்து வரும் ரயில்வே வருவாய்
பொதுப் போக்குவரத்துக்கு மக்கள், தொடருந்து சேவையைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் தொடருந்து வருவாய் அதிகரித்து வருகிறது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சேவையை அத்தியாவசியமாகக் கருதி அரசினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தாலும், மக்கள் சார்பாக தேவையான தீர்மானங்களை எடுக்கப்போவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடருந்து கட்டணம் உயர்த்தப்பட்டால், அனுமதிச் சீட்டு இல்லாமல் பயணிகளை தொடருந்துகளில் ஏற்றிச் செல்லப்போவதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரே இரவில் பயணச்சீட்டு விலையை மாற்ற முடியவில்லை என்றும், இதுபோன்ற திடீர்
முடிவை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்
கூறியுள்ளது.



