தொடருந்து திணைக்களத்திற்கு புதிய சிக்கல்: கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு
இலங்கை தொடருந்து திணைக்களத்தினுடைய பாதுகாப்பு பிரிவின் பதவி வெற்றிடங்கள் காரணமாக தற்போது சேவையில் ஈடுபடும் தொடருந்துகளின் பாதுகாப்பு பணிகளில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய தொடருந்து திணைக்கள பாதுகாப்பு படையில் சுமார் 300 பணியிட வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பாதுகாப்புத் துறையின் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து பாதுகாப்பு படை வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து பயணிகளின் பாதுகாப்பு
இதற்கமைய தொடருந்து பாதுகாப்பு படையில் வெற்றிடமாக உள்ள குறித்த பணியிடங்களை நிரப்புவதில் நிதி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தொடருந்து பாதுகாப்பு பிரிவின் பணியின் தேவைக்கேற்ப தற்போது 719 பாதுகாப்பு அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்.
எனினும் தற்போது 402 அதிகாரிகள் மாத்திரமே பணியில் உள்ளதாகவும், இந்த ஆண்டு 34 அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 47 அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான நிலையில் தொடருந்து பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தொடருந்து சேவைகளுக்கான பாதுகாப்பை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பாதுகாப்புப் படை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |