22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி: கரு ஜயசூரிய
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்காக தொடர்ந்து வாதிடும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிவில் மற்றும் அரசியல் சக்திகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

22ஆவது திருத்தச் சட்டம்
இலங்கையை எதேச்சதிகார ஆட்சிக்கு மாற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து 22ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் நேற்று (21.10.2022) நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானமானது ஒரு மிக முக்கியமான இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தமாகும்.

இது புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டு மக்களின் நலம்
இந்த தருணத்தில், அனைத்து அரசியல் சக்திகளும் இந்த சாதனையால் வலுப்பெற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டு மக்களின் நலனுக்காக இந்த பணி முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.