மாவீரர் நினைவேந்தல்களில் அச்சமின்றி கலந்து கொள்ளுமாறு மக்களை அழைக்கும் அரசியல்வாதி (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மாவீரர் நினைவேந்தல்களில் அச்சமின்றி அனைவரும் கலந்துகொண்டு இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்தவர்களை நினைவு கூருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணிகளில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“வடக்கு - கிழக்கில் 33 மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்தன. அதில் சில இடங்களில் இன்றும் இராணுவ முகாம்கள் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் 09 துயிலும் இல்லங்களும் வட மாகாணத்தில் 24 துயிலும் இல்லங்களும் உள்ளன.
நீதிமன்றத் தீர்ப்பு
2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவது தடைப்பட்டிருந்தது. இராணுவத்தினர் பல தடைகளை விதித்திருந்தார்கள்.
இந்த ஆண்டு வழமைபோன்று தடையுத்தரவுகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்
முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் பலருக்கு எதிராக தடைகளை பெற முயற்சித்த போதும் இறந்தவர்களை நினைவுகூருதல் ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில், வடக்கு - கிழக்கில் எந்த நீதிமன்றங்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே துயிலும் இல்லங்களுக்கு அச்சமின்றி வந்து விளக்கேற்றுமாறு கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
தமிழர்களின் கடமை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, கண்டலடி துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்துள்ளது.
தாண்டியடி துயிலும் இல்லத்தில் விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ளதன் காரணமாக துயிலுமில்லத்திற்கு அருகில் நினைவேந்தலை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவீரர்களை நினைவுகூர வேண்டியது தமிழர்களாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகவுள்ளது. அந்தவகையில் எல்லோரும் அந்தந்த பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களுக்கு சென்று வணக்கத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவித்தார்.
இதன்போது பட்டிப்பளை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் புஸ்பலிங்கம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



