புடினின் அதிரடி உத்தரவினால் ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - எல்லை நோக்கி ஓடும் ரஷ்யர்கள்
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக இராணுவ அணிதிரட்டல் அறிவிப்பு வெளியாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு நேற்று உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா முழுவதும் சுமார் 38 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாகவும், நாடு முழுவதும் நேற்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் 1,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டை விட்டு தப்பியோடும் ஆண்கள்
இந்த நிலையில், இராணுவ அழைப்பை மீறி ரஷ்ய நாட்டினை சேர்ந்த ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஜார்ஜியாவின் எல்லையில், போரில் பங்கேற்காமல் தப்பிக்க முயற்சிக்கும் ரஷ்யர்கள் பலர் தமது கடவுச்சீட்டுக்களுடன் நாட்டு எல்லையை நோக்கி படையெடுத்துள்ளதாகவும்,நகர் பகுதிகளில் சுமார் 5 கிமீ (3 மைல்கள்) தூரம் வரை வாகனங்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு விமானம் மூலம் எளிதாக செல்லக் கூடிய இடங்களாக இஸ்தான்புல், பெல்கிரேட் அல்லது துபாய் போன்ற நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டு விலை உயர்ந்துள்ளது.