சுமந்திரன் தொடர்பில் ரணிலின் எதிர்ப்பு! எதிர்பார்க்கப்படும் ரணில் -சுமந்திரன் கடும் வாத விவாதம்!
சுமந்திரனுக்கு எதிராக ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தொடர்பில் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு, பகல் போசனத்துக்காக இடைநிறுத்தப்படுவதற்கு சற்று முன்னர் அவர் இந்த ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கடந்த மே 20 ஆம் திகதி வெளியிட்ட கருத்தை ஒரு வாரத்துக்குள் திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற விவகார குழுவில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் இது ஏற்புடையதல்ல. என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, சுமந்திரன் தமது கருத்தை நாடாளுமன்ற அவையில் கூறவேண்டும். நாடாளுமன்ற விவகார குழுவில் கூறியிருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவகாரக்குழு
நாடாளுமன்ற விவகாரக்குழு என்பது நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பாக கூடுகின்ற குழு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இதன்மூலம் கருத்துக்கூறும் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
சாணக்கியன் தொடர்பாக இன்று தாம் கருத்து வெளியிட்டபோது, சுமந்திரன் சபையில் இருந்தார். எனினும் அந்த வேளையில் அவர் எதனையும் கூறவில்லை என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, மனித உரிமைகள் தொடர்பில் பேசும் சுமந்திரன் ஏன் தமது அடிப்படை உரிமைகளுக்கு இடம்தரமுடியாது என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு அவர், சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் இது தொடர்பில் தமக்கு அறிக்கை தரப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாரம்பரியம் தெரியாத பிரதமர்
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க எழுப்பியுள்ள இந்த ஒழுங்குப்பிரச்சினை தொடர்பில் எமது செய்திச்சேவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ரணில் விக்கிரமசிங்க, இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற பாரம்பரியத்தை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்ற அமர்வு ஒன்றின்போது, அனுதாப பிரேரணையின் மீதான உரையின்போது, வேறு விடயங்கள் தொடர்பாக பேசமுடியாது.
இது நீண்ட காலமாக நாடாளுமன்றில் உள்ள பாரம்பரியமாகும். அவ்வாறு பேசுவது யாருக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறதோ, அவருக்கு செய்யப்படுகின்ற அவமரியாதையாகும்.
எனினும் அது பிரதமருக்கு தெரியவில்லை. இந்த கருத்திற்கொண்டே தாம், அனுதாப்பிரேரணையின்போது, பிரதமர் சாணக்கியன் தொடர்பாக கூறிய கருத்துக்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை.
எனினும் இதனையே தாம் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கூறியதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
இறந்தவருக்கு ரணிலால் இரண்டாவது தடவை அவமரியாதை
இந்தநிலையில் அது தொடர்பில் அனுதாப்பிரேரணையின் மத்தியில், மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பியதன் மூலம், அனுதாபம் சமர்ப்பிக்கப்படும் இறந்தவருக்கு பிரதமர் ரணில், மீண்டும் அவமரியாதை செய்திருப்பதாக சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தமது கருத்தை கூறுவதற்கு உரிமையுள்ளது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் எம் ஏ சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான இந்த வாத விவாதம் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் முக்கிய இடத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.