பொது பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
நீதிவான்கள் மீது குற்றம் சுமத்தியமை தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த வழக்கை தாக்கல் செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர், இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றில் வெளியிட்டார்.
கடந்த காலங்களில், போராட்டங்களை தடுக்க பொலிஸார் தடைகளை கோரியபோதும் நீதிவான்கள் அதனை நிராகரித்தமையே, தற்போதைய நிலைக்கு காரணம் என்று பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதியிருந்தார்.
சாதாரணமாக குடியியல் அதிகாரி ஒருவர், பிரதம நீதியரசருக்கு தகவல் ஒன்றை தெரிவிக்கவேண்டுமானால், அது சட்டமா அதிபர் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டும்.
எனினும் பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நேரடியாகவே நாட்டின் மூன்றாவது குடிமகனான பிரதம நீதியரசரிடம் தமது முறைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே அவர் மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பிரதம நீதியரசர் கேட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
