இலங்கையில் நீதியில்லை! மீண்டும் ஒருமுறை சர்வதேசத்திடம் முறையீடு
இலங்கையின் நாடாளுமன்றத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை அரசாங்கக்கட்சியினர் தாக்க முயற்சித்ததாக IPU என்ற நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் CPU என்ற பொதுநலவாய ஒன்றியம் ஆகியவற்றில் முறையிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல இது தொடர்பான எழுத்துப் பூர்வமான முறைப்பாட்டை செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமது முறைப்பாட்டை செய்துள்ள கிரியெல்ல, விவாத நேரம் நீடித்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு வழங்கப்படவிருந்த மேலதிக நேரத்தை அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஏனைய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலவந்தமாக நிறுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்காரவை வார்த்தைகளால் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் விஜேசேகர உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனுஷ நாணயக்காரவை தாக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் தூண்டிவிடப்பட்டவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை என்பதை உறுதியாக கூறமுடியும்.
இந்தநிலையில் எதிர்க்கட்சியினரின் விவாத சுதந்திரத்தை தடுக்கும் நோக்கத்தில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.