இலங்கையில் காலநிலையால் ஏற்பட்டுள்ள அழிவுகள்! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடர் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது இதனை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
காலநிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அழிவுகள்
"காலநிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் நாடாளுமன்றம் ஆராய்வது அவசியம். எனவே, விசேட தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.

இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
எனவே, அந்த அறிவுறுதல்களுக்கு அமைய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கை எடுத்தது என ஆராய்வது மிகவும் அவசியம். ஆனால், எந்தப் பதிலையும் வழங்காமல் மௌனமாக உள்ளது.
புயல் உள்ளிட்ட இயற்கை இடர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், பாதிப்புக்களைக் குறைக்க முடியும். எனினும், டித்வா புயலால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை." - என்றார்.