அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் - நேரலை
புதிய இணைப்பு
புதுவருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.
2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
2025ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (07) ஆரம்பமாகும் நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் துறைசார் அமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளது.
மத்திய வங்கி நிதி நிலை
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் மற்றும் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் என்பன பற்றியும் எதிரணிகள் கேள்விகளை எழுப்பவுள்ளன.
இன்று மத்திய வங்கி நிதி நிலை அறிக்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.
நாளைமறுதினம் வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது.
அரிசி தட்டுப்பாடு, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு உள்ளிட்ட விடயங்களால் அரசு மீது எதிரணிகள் சரமாரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்து வருவதால் அரசியல் பரபரப்புக்கு மத்தியிலேயே சபையும் கூடுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |