வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ சின்னங்களை உடன் அகற்றுங்கள் : சிறீதரன் கோரிக்கை
புதிய இணைப்பு
வடக்கு கிழக்கில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் சின்னங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தாயகத்தில் இலங்கையை தாங்கி நிற்கும் வலிந்த கரங்கள் ஒருபுறமும், இராணுவச் சிப்பாய் ஒருவரின் இராணுவச் சீருடையுடனான உருவச்சிலை ஒருபுறமும் நிறுவப்பட்டுள்ளது.
தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து, நூறு வீதம் தமிழ் மக்களின் புழக்கம் செறிவாக உள்ள தமிழர் தாயகப் பகுதிகளின் பெருநகரங்களிலும், பிரதான வீதிகளிலும் ஏராளமான போர் வெற்றிச் சின்னங்கள் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளன.
குறிப்பாக கிளிநொச்சி நகர மத்தியில், டிப்போச்சந்திக்கும் கிளிஃகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் அருகேயுள்ள சந்திரன் பூங்கா வளாகத்தில், தமிழர்களின் இதயங்களைத் துளைத்து உள்நுழைவதான தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும், துப்பாக்கிச் சன்னம் ஒன்றுடனான போர் வெற்றிச் சின்னமும், ஆனையிறவுப் பகுதியில் A.9 பிரதான வீதியின் இருமருங்கும், இருவேறு போர் வெற்றிச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் A.35 பிரதான வீதியின் ஒருமருங்கில், ஆயுதம் தரித்த இராணுவச் சீருடை, சிங்கக்கொடி, துப்பாக்கி என்பவற்றை ஏந்தியவாறு வெற்றிக்களிப்பில் மிதக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவரது உருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
அடிப்படை உரித்துக்கோரிப் போராடிய ஒரு இனத்தைத் தோற்கடித்துவிட்டோம் என்கிற மமதையையும், போரின் குரூரத்தையும், படையினரது ஆக்கிரமிப்புச் சிந்தையையும் முகத்திலறைந்தாற்போல் பிரதிபலிக்கும் ஆயுத கலாசார நினைவுச்சின்னங்கள் சீர்குலைக்காத இன நல்லிணக்கத்தை, அவை நினைவுபடத்தாத போரியல் உணர்வுகளை, நினைவேந்தல் உரித்தை நிலைநாட்டுவதற்காக அமைத்த துயிலும் இல்ல முகப்புகள் சீர்குலைக்கும் என்று சிந்திப்பதுகூட ஆக்கிரமிப்பின் அதியுச்ச வெளிப்பாடாகவே தென்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன் மூலம் எங்களைத் நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை, இராணுவத் தலையீடுகளோ, பொலிசாரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்வதன்மூலம் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வாருங்கள் என்று சிங்கள இளையோரை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (24) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதற்கமைய, ஈழத்தமிழர்கள், இனவிடுதலைக்காக உயிர்துறந்த தமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட விளைநிலங்களான துயிலும் இல்லங்களுக்குச் சென்று நினைவேந்தும் உரிமையை நிலைநிறுத்தத் தொடங்கியிருந்தார்கள்.
ஆனால், தமது உறவுகளை இழந்து துயரடைகின்ற நெஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதை உணரத்தலைப்படாத அதிகாரக் கரங்கள், அடிப்படை மனிதாபிமான உணர்வுகளைக்கூடப் புறந்தள்ளி இன்னுமின்னும் எங்கள் மக்களை வஞ்சிக்கும் செயற்பாட்டையே மிகக் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.
இனி ஒருபோதும் போரொன்றை விரும்பாத எமது மக்கள், பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் தங்களின் பிள்ளைகளை, அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில் சென்று வழிபடுவதற்கும், விளக்கேற்றுவதற்கும், கண்ணீர்விட்டு அழுவதற்குமான சந்தர்ப்பங்களைத் தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களும், விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்படுகின்றன.
போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் நிரம்பிய பின்னரும், வடக்கு, கிழக்கிலுள்ள 27 மாவீரர் துயிலும் இல்லங்களில், யாழ்ப்பாண மாவட்டத்தின் கொடிகாமம், எள்ளங்குளம், கோப்பாய் ஆகிய துயிலும் இல்லங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லம், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, ஆலங்குளம், அளம்பில், நெடுங்கேணி களிக்காடு, மற்றும் மணலாறிலுள்ள உதயபீடம், கோடாலிக்கல் புனிதபூமி ஆகிய துயிலும் இல்லங்கள், வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லம், மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லம் ஆகிய பன்னிரண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்றுவரை இராணுவப் படை முகாம்களாக முற்றுகையிடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
