மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! (Photos)
வடக்கில் பல பகுதிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு நேற்று (24.11.2022) மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு. அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாவீரர் நினைவு நாள்
மாவீரர் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி: குமார்
திருகோணமலை
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கல வாத்தியத்துடன் கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, வருகை தந்தோர் அனைவராலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் திருகோணமலை மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எம்.நவமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் க.துளசி, திருகோணமலை நகரசபைத் உபதவிசாளர் கா.கோகுல்ராஜ் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி: நவோஜ்
யாழ்ப்பாணம்
மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25.11.2022) இன்றைய தினம் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் போராளி செழியன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தி குறித்த நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின்போது மாவீரர்களது நினைவுரைகள் இடம்பெற்றன. பின்னர் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி: கஜிந்தன்