ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையான சர்ச்சைக்குரிய நபருக்கு மீண்டும் சிறைத்தண்டனை
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த வெசாக் தினத்தில் விடுதலையான சர்ச்சைக்குரிய அதுல திலக்கரத்னவுக்கு இன்று(25) மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கியொன்றில் கடன் பெறுவதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் அநுராதரபுரம் மேல்நீதிமன்ற நீதிபதி லலித் டி ஹேவாவசம் குறித்த தண்டனையை விதித்துள்ளார்.
கடன் தொகை
போலியான ஆவணங்களைத் தயாரித்து வங்கியொன்றில் இருந்து 35 லட்சம் ரூபா கடன் தொகையை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டதாக குறித்த டப்.எம். அதுல திலகரத்னவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் இன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்போது வங்கியில் கடன் பெறுவதற்கான ஆவணமொன்றை மோசடியாகத்தயாரித்த குற்றத்துக்காக ஐந்து வருடங்கள் கடூழியச்சிறைத்தண்டனையும், அதனை மோசடியாகப் பயன்படுத்திய குற்றத்துக்காக இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு
அதற்கு மேலதிகமாக வழக்கின் முறைப்பாட்டாளர் டொக்டர் எஸ்.டப்.ஏ. காமினி விமலானந்தவுக்கு நாற்பது லட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் அதனை வழங்கத் தவறினால் மேலும் பத்து மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெசாக் தினத்தில் சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை பயன்படுத்தி மேற்குறித்த அதுல திலகரத்னவை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அநுராதரபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேறொரு வழக்கில் அதுல திலகரத்னவுக்கு இன்று மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




