பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை
பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில் சுற்றாடல் அமைச்சு தலைமை வகிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்துள்ளது.
பொருட்கள் கொள்வனவு செய்யப்படும்போது பைகளுக்குக் கட்டணம் அறவிடுவதற்கான முன்மொழிவு குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டபோது இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
பொலித்தீன் பயன்பாடு
கட்டணம் அறவிடுவதன் மூலம் பொலித்தீன் பயன்பாட்டை அர்த்தமுள்ள வகையில் குறைக்க முடியுமா என்றும், கட்டணத் தொகையை யார் தீர்மானித்தது என்றும் குழு உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பில் பொலித்தீன் பைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினர்.
மீன்பிடி, நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் இந்தக் குழு கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.