தனது இறுதிப் பயணம் இப்படித்தான் இருக்க வேண்டும்: பாலித தெவரப்பெருமவின் கடைசி ஆசை
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன் அவரது இறுதி விருப்பப்படி அவர் தயாரித்த கல்லறையில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
மின்சாரம் தாக்கியமையினால் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே பாலித தெவரப்பெருமவின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியை இன்று மத்துகமை, யட்டதொலவத்த பகுதியில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தாமே தயாரித்த கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்பயணம்
இந்த நிலையில் தனது இறுதிப்பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என அவர் கூறிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பாலித தெவரப்பெரும தான் இறப்பதற்கு முன்னரே தனக்கான கல்லறையையும் கட்டிவைத்துள்ளார்.
அவர் தனது கடைசி ஆசையாக தான் இறந்த பின் அதிக பணச் செலவில் மரண பெட்டியை வாங்க வேண்டாம் எனவும், அந்த பணத்தை ஊரில் உள்ள சிறார்களுக்கு புத்தகம், உணவு என்பன வழங்குமாறு குடும்பத்தாரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் இரேஷா ஹேமமாலி எழுதிய பாடல் ஒன்றை சில வார்த்தைகளை மாற்றி பாலித்த தெவரப்பெரும பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த பாடலை பாடியபடி தனது இறுதி ஊர்வலம் அமையவேண்டும் என்பதுதான் தெவரப்பெரும விருப்பம் எனவும் கூறப்படுகிறது. அத்தோடு இறுதி பயணத்தில் தன்னை தூக்கிச் செல்பவர்களுக்கும் அவர் பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் எழுதியுள்ள பாடல்வரிகள்,
இன்றும் வழக்கமான பாதையில் தான் செல்கிறேன், ஆனால் இது வேறு பயணம் மகனே……
நான் தனியாக வந்த பிறகு பலர் வருகிறார்கள்……
என்றும் எனது பாரத்தை உன் தோளில் நான் இறக்கியதில்லை மகனே…..
பாரம் அதிகம் என்றால், தரையில் வை… மகனே… உன் தோள் வலிக்கும்…..
என் தோட்டத்தில் ஏரிக்கு அருகில் கல்லறை ஒன்றை நானே கட்டினேன், என் சிறிய மகனே …..
எனது தனிமைக்கு துணையாய் நாளை காலை மூத்த மகனை நான் தேடிக்கொள்வேன்……
இயற்கையின் விதியை நான் கடைப்பிடித்து செல்கிறேன்….
போகும் வழியில் என்னிடம் இருக்கும் மருந்து சீட்டுகளை எடுத்து சென்று அம்மாவிடம் கொடு…….