பாலியாறு நீர்வழங்கல் திட்டம்: அநுரவிடம் கோரிக்கை விடுத்துள்ள சீ.வீ.கே.சிவஞானம்
பாலியாறு நீர்வழங்கல் திட்டம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அந்தக் கோரிக்கையை சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்.மாவட்ட மக்கள் முகம் கொடுத்துவரும் நீர்விநியோகப் பிரச்சனை தொடர்பாக தாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என நான் திடமாக நம்புகிறேன்.
நீர் விநியோகம்
கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள்.
வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்கென வருடம் பூராகவும் கடலைச் சென்றடையும் நீரை திசைதிருப்பும் திட்டமாக பாலியாறு நீர்விநியோகத் திட்டத்தை முன்மொழிந்திருந்தது.
இந்தத் திட்டத்தை செலவுச் சிக்கனமான, சாத்தியமான அவசரமான ஒன்றாக பரிசீலித்து ஏற்றுக்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சிபாரிசு செய்தது.
நிதி ஒதுக்கீடு
2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கென ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டு, திட்டப்பணிமனையும் உத்தியோகபூர்வமாக வெள்ளாங்குளத்தில் 2024 மே மாதம் பதினைந்தாம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் தொடர் நிறைவேற்றலுக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் 2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாமையை இட்டு மிகவும் கவலையும் ஏமாற்றமும் அடைகிறோம். இந்தத் திட்டம் கைவிடப்பட்ட மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது.
எனவே இந்தத் திட்டத்தின் நிறைவேற்றலுக்கான போதிய நிதியை தற்போது பரிசீலிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அதன் துரித நிறைவேற்றத்திற்கான பணிப்புரையை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |