ஃபிஃபா மாநாட்டில் இஸ்ரேல் பிரதிநிதியுடன் கைகுலுக்க மறுத்த பாலஸ்தீன கால்பந்து தலைவர்!
கனடாவில் நடைபெற்ற 76ஆவது ஃபிஃபா (FIFA) மாநாட்டில், பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜூப், இஸ்ரேல் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவருடன் கைகுலுக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டின் போது ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, ரஜூப்பையும் இஸ்ரேலிய கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவரான பாசிம் ஷேக் சுலைமானையும் மேடைக்கு அழைத்து இருவரையும் நெருங்கி வருமாறு கேட்டுக்கொண்டார்.
பாலஸ்தீனத் தரப்பு
இருப்பினும், ரஜூப் அவரோடு கைகுலுக்கவோ அல்லது அருகில் நிற்கவோ மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் சூசன் ஷலாபி, "இஸ்ரேலின் பாசிசத்தையும் இனப்படுகொலையையும் மறைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒருவருடன் கைகுலுக்க முடியாது" என்று ரஜூப் கூறியதாகத் தெரிவித்தார்.

மேற்குக்கரை குடியேற்றப் பகுதிகளில் உள்ள இஸ்ரேலிய கிளப்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரஜூப் ஆற்றிய 15 நிமிட உரையின் நோக்கத்தையே இந்த கைகுலுக்கும் முயற்சி சிதைத்துவிட்டதாக பாலஸ்தீனத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேற்குக்கரை பகுதியில் உள்ள இஸ்ரேலிய கிளப்களுக்கு எதிராகத் தடை விதிக்க பாலஸ்தீனம் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியின் சட்டபூர்வ அந்தஸ்து இன்னும் சர்வதேச சட்டத்தின் கீழ் தீர்க்கப்படாததைக் காரணம் காட்டி ஃபிஃபா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை எதிர்த்து பாலஸ்தீன கால்பந்து சங்கம் தற்போது விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், 2026 உலகக்கோப்பையில் ஈரான் அணி விளையாட ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri