பிரார்த்தனையில் ஈடுபட்ட போராட்டக்காரரை கொள்கலனில் இருந்து தள்ளிவிட்ட பாகிஸ்தானிய படையினர்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, சரக்குக் கொள்கலனில் இருந்து ஒருவரைத் தள்ளிவிட்டு, பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் மிலேச்சத்தனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் காணொளி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் என்று கூறப்படும் பாதுகாப்புப் பிரிவினர், போராட்டக்காரரை, கொள்கலனில் இருந்து தள்ளிவிட்டபோது, அவர், அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக, கொள்கலனைப் பிடித்துக் கொள்ள முயற்சிப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன.
பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்பின் தகவல்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் கட்சி ஆதரவாளரான போராட்டக்காரர், தம்மை ஆயுதமேந்திய அதிகாரிகள் அணுகியபோது, ஒரு கொள்கலன் மீது இருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
வன்முறைகள்
எனினும், படையதிகாரிகள், சுமார் மூன்று மாடிக்கு சமமான உயரத்தில் இருந்து அவரை கொடூரமாக தள்ளிவிட்டனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், அந்த போராட்டக்காரரின் நிலை தெரியவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிய தலைநகரின் ஜின்னா மற்றும் அட்டதுர்க் ஒழுங்கையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்போது, பல இடங்களில், பாதுகாப்புப் படையினருக்கும் அவர்களுக்கும் இடையே வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக குறைந்தது ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் கைது
இதில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகளும் இரண்டு பொதுமக்களும் அடங்குகின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2022இல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட கான் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |