பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணக்கம்
2022ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி மற்றும்17 ஆம் திகதிகளில், பாகிஸ்தான் கராச்சியில் உள்ள எக்ஸ்போ நிலையத்தில் நடைபெற்ற பாகிஸ்தான், இலங்கை ஆயுதப்படை பாதுகாப்பு உரையாடலின் (AFDD)போது, அனைத்து பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிக்க பாகிஸ்தானும் இலங்கையும் இணக்கம் வெளியிட்டன.
பாகிஸ்தான் தூதுக்குழுவிற்கு, அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல், ஹமூத் உஸ் ஜமான் கான், தலைமை தாங்கினார்.
இராணுவ உறவுகளின் தற்போதைய நோக்கம்
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல், கமல் குணரத்ன தலைமை தாங்கியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானும் இலங்கையும் இருதரப்பு இராணுவ உறவுகளின் தற்போதைய நோக்கத்தை மதிப்பாய்வு செய்தன.
அத்துடன் இதுவரை அடையப்பட்ட முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்ததாக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இராணுவப் பயிற்சி
பிராந்திய பாதுகாப்பு மற்றும் வரவிருக்கும் சவால்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பாதுகாப்புத் துறை, இராணுவப் பயிற்சி, கூட்டுப் பயிற்சி, உயர்மட்டப் பயணங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு தொடரும் என்றும் இணங்கிக்கொள்ளப்பட்டது.
இறுதியில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, அடுத்த கூட்டம் 2023 இல் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட திகதிகளில் இலங்கையில் கூட்டப்படும் என்று இணங்கப்பட்டது.
இதேவேளை இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு பிரதிநிதிகள், பாக்கிஸ்தானின்
பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர், பாதுகாப்பு உற்பத்தி செயலாளர், செயலாளர்
ஆகியோரையும் சந்தித்தனர்.
