முப்பதாண்டு கால உள்நாட்டு போரின் வலிய தடங்கள்
இலங்கையில் ஏற்பட்டிருந்த தமிழருக்கு எதிரான சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு போரின் விளைவாக புதிய தமிழ் புலிகள் தோற்றம் பெற்றிருந்தது.
அகிம்சை முறையிலான தொடர் போராட்டங்களால் தங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை என்ற தமிழ் இளைஞர்களின் மனதில் ஏற்பட்டிருந்த விரக்தியின் விளைவு தான் புதிய தமிழ் புலிகள் அமைப்பின் தோற்றமாகும்.
புதிய தமிழ் புலிகள் தோற்றம் பெற்றிருந்த காலத்தில் தமிழர்களின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி; தமிழர்களை காத்துக்கொள்ளும் விடுதலையை முதன்மைப்படுத்தி நாற்பதுக்கும் மேற்பட்ட போராட்ட அமைப்புக்கள் தோற்றம் பெற்றிருந்தன.இவை தமிழ் இளைஞர்களை கொண்டதாக உருவாக்கம் பெற்றிருந்தன.
இந்த விடுதலை இயக்கங்கள் வடக்கு இலங்கையில் தோற்றம் பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தந்தை செல்வாவின் அகிம்சை போர் முறையும் பொன் சிவகுமாரின் விடுதலைப் போர் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்தே ஆயுதப் போராட்டங்கள் முனைப்புப் பெற்றன.
பெயர் மாற்றம்
தமிழர்களை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு அழிப்பில் இருந்து காத்துக்கொள்ள உருவான விடுதலை இயக்கங்களில் சிறப்பாக செயலாற்றும் முனைப்பையும் அடித்தளத்தையும் ஆரம்பம் முதலே கொண்டிருந்த இயக்கமாக புதிய தமிழ் புலிகள் இருந்து வந்திருந்தது.
அதன் வெளிப்பாடாக புதிய தமிழ் புலிகள் அமைப்பின் அமைப்பு விதிகளில் எதிர்கால பொருத்தப்பாடுகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை ஏற்படுத்தியது.
கொரில்லா போராட்ட வடிவமாக தங்கள் போராட்ட வடிவத்தை வடிவமைத்திருந்த புதிய தமிழ் புலிகள் தமிழர்களுக்கான தனிநாட்டு கோரிக்கையை இலக்காக கொண்டு அதன் கொரில்லா போர்முறையை விரிவுபடுத்திக் கொண்டது.
இவ்வாறு புதிய தமிழ் புலிகள் தங்களின் கொள்கை மீது தெள்ளத் தெளிவோடு தங்களின் அமைப்பு முறையின் மீதான சீர்திருத்தங்களோடு தம்மை புடம் போட்டுக் கொண்டது.
இந்த முயற்சியின் பயனாக புதிய தமிழ் புலிகள் தங்கள் அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டது.புதிய தமிழ் புலிகள் விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாறிக்கொண்டது.
தமிழீழமே தமக்கான நிரந்தரத் தீர்வு என்ற வலுவான கொள்கையை இலக்காக கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 மே 05 (1976.05.05) பிறந்து கொண்டது.
தமிழீழத்தை இலக்காக கொண்டு தோற்றம் பெற்ற தமிழ் இளைஞர்கள் இயக்கங்களில் திடமான கொள்கைப்பிடிப்போடு தொடர்ந்து வலுமிக்க செயற்பாடுகளால் உச்சளவு வளர்ச்சி கண்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விதிக்கப்பட்டுள்ள தடை
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் 19 மே 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும், இன்றும் சர்வதேச அளவில் அவர்களின் செயற்பாடுகள், வீரியமிக்கதாக இருந்து வருகின்றது என இலங்கை அரசின் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அரசாங்கம் சார்ந்தவர்களின் செய்தி வெளிப்பாடுகள் சுட்டி நிற்கின்றன.
அத்தோடு உலக நாடுகள் பலவற்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்த இயக்கம் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு கேட்டு நீதிமன்றங்களை நாடுவதோடு பல்வேறுபட்ட முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்து கொண்ட நாடுகள்;அந்த அமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாக அது இயங்கிய தளத்தின் நாடு அறிவித்துவிட்டு பதினாறு வருடங்கள் கடந்த பின்னும் அந்த அமைப்பின் மீதான தடை இதுவரை நீக்கப்படவில்லை.
ஒவ்வொரு உலக நாடுகளின் காலத்துக்கு காலம் மாற்றிக்கொள்ளும் அரசாங்கங்கள் அத்தனையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை தளரத்தவோ நீக்கவோ இதுவரை முயற்சிக்கவில்லை.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்து கொண்ட இலங்கை இதுவரை அந்த தடையை தொடர்ந்து வருகிறது.
அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு உள்நாட்டு கலக (விடுதலை கோரி போராடும் உள்நாட்டு அமைப்புக்களை அந்த நாடுகள் கலக அமைப்புக்களாகவோ அல்லது பயங்கரவாத அமைப்புக்களாகவோ சித்தரித்துக் காட்டி வருகின்றன.) அமைப்பின் மீது இருவகை தடைச்சட்டங்களை இன்றுவரை நடைமுறையில் பேணி வருகின்றது இலங்கை அரசாங்கம்.
இந்த தடைகள் இப்போதும் இலங்கையில் ஈழத்தமிழர்களின் சுதந்திரமான செயற்பாடுகளில் தலையீடு செய்து கொண்டு தான் இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்
புதிய தமிழ் புலிகள் தங்கள் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என பெயர் மாற்றிக் கொண்ட பின்னர் தாக்குதல் உரிமை கோரல் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற புதிய பெயருடனும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள் பதினொன்றை பெயர் குறிப்பிட்டு உரிமை கோரியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகள் பதினொன்றை உரிமை கோரி 1978 ஏப்ரல் 25 அன்று முதன் முறையாக உத்தியோகபூர்வ அறிக்கையினை வெளியிட்டிருந்தனர்.
இந்த தெளிவான உரிமை கோரலை அடிப்படையாக கொண்டு இலங்கை ஆட்சியாளர்களின் பார்வை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது திரும்பியது.
விடுதலை கோரி போராட புறப்பட்டிருந்த பல விடுதலை இயக்கங்கள் இருந்தும் அப்போது ஆட்சியில் இருந்து ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கத்தின் பார்வை அப்போது தான் புதிய பரிமாணத்தை பெற்றுக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது பாய்ந்தது.அதன் விளைவாக இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது முதலாவது தடை விதிக்கப்படுகின்றது.
இந்த தடைச்சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் 1978 மே 19 இல் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
1978 மே 19 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் ஜெ.ஆர் .ஜெயவர்த்தனா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட தடைச்சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் என அழைக்கப்படுகின்றது.
இந்த சட்டத்தின் மூலம் இலங்கையின் எப்பகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அத்தோடு அவர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கும் இந்த தடைச்சட்டம் வலுவளித்துக் கொண்டது.
பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழீழ விடுதலை புலிகளின் முனைப்பான வீரியமிக்க செயற்பாடுகளால் திணறத் தொடங்கியது இலங்கை அரசாங்கம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் மயமாதலை தடுத்து அவர்களின் செயற்றிறனை இழக்கச் செய்யும் ஒரு ஏற்பாடாக இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டுமல்லாது தமிழர்களையும் மிக மோசமாக கட்டுப்படுத்தியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ அமைப்பாகவும் அரசியல் அமைப்பாகவும் இயங்கிக்கொள்ள ஆரம்பித்து நகரத்தொடங்கிய காலத்தில் உருவான பயங்கரவாத தடைச்சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளை முளையில் கிள்ளிவிட முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகும்.
ஆனாலும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மிக மோசமாக பாதிக்கும் வகையில் இந்தச் சட்டம் செயலுருவம் பெற்று இற்றை வரைக்கும் இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகின்றது என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் 1978 ஜூலை 20 அன்று நடைமுறைக்கு வந்தது.அப்போது ஆட்சியில் இருந்த ஐ.தே.க வின் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்டு இருந்தது.
சாதாரண தனிமனித உரிமைகளைக் கூட பயந்து பயந்து அனுபவிக்கும்படி அச்சுறுத்தியது என்றால் மிகையில்லை.
இதே பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலேமே இலங்கையில் அரசியல் கைதிகள் என்ற ஒரு பிரிவினர் உருவாக்கப்பட்டனர் என்பதும் நோக்கத்தக்கது.
ஆனாலும் தமிழர்களின் மீது பாயும் பயங்கரவாத தடைச்சட்டம் அதே செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கையின் வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் சிங்களவர்கள் மீது பாய்ந்து கொள்வதென்பது மிகவும் குறைவு.
இந்த பயங்கரவாத தடைச்சட்டம் யாரொருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யவும் அவர்களை நீண்ட காலம் தடுத்து வைக்கவும் வகை செய்து கொடுக்கிறது.அத்தோடு இராணுவத்திற்கும் அதிக அதிகாரங்களை வழங்கி வருகின்றது.
ஆதங்கத்தின் வெளிப்பாடு
விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால எழுச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியாத பொறுப்புணர்ச்சி இல்லாத சிங்கள மக்கள் தங்கள் ஆதங்கத்தினை கட்டுப்பாடு இல்லாத வகையில் வெளிப்படுத்திக் கொண்டனர்.
சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களுடன் சேர்ந்து இப்படி நடந்துகொண்டதன் விளைவுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளின் அவசியத்தையும் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்லிக் கொண்டன.
மிகப் பாரிய இழப்புக்களை தமிழர்கள் சந்தித்துக் கொண்டனர் என்பது துயரமான செய்தி.
வரலாற்றில் கறைபடிந்த இந்த செயல்களுக்காக எந்தவொரு காலத்திலும் பொறுப்பான எந்தவொரு இலங்கை அரசாங்கத்தினாலும் தமிழர்களுக்கு பொறுப்புக்கூற முடியாத நிலையை இது உருவாக்கியிருக்கிறது.
வலு மிக்க பாரம்பரிய இனம்
தமிழர்களை இலங்கையின் ஒரு பகுதியினராக ஏற்று நடந்து போகும் மனநிலை இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இலங்கை ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை.
ஆனாலும் இலங்கையின் அரசில் யாப்பில் தமிழர்களும் இலங்கையின் வலுவான ஒரு பாரம்பரியமிக்க இனமாக இலங்கையின் ஒரு கூறாக கருதப்பட்டு வருகின்றதை உற்று நோக்க வேண்டும்.
ஆயினும் அவற்றை அந்த உரிமைகளை தமிழர்களுக்கு கொடுக்க மறுத்து அவற்றை வெறும் விதிகளாக மட்டுமே பேணி வருகின்றது.அப்படி இருப்பவற்றை கூட காலத்துக்கு காலம் மாற்றத்திற்கு உட்படுத்தி அவற்றையும் இழக்கச் செய்துகொண்டு வருகின்றது.
1956 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிச்சிங்கள சட்டம் இதற்கு ஒர் நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
அதுவரை இருந்து வந்த ஆட்சி மொழிகளான தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றின் நடைமுறையை மாற்றி ஆட்சி மொழியாக சிங்களம் மட்டுமே என்ற சட்டம் இருந்தவற்றை பறித்து இல்லாது செய்ததாகும்.
இது மட்டுமில்லாது இலங்கையில் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ ஒரு தமிழ் மொழி பேசுபவர் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இலங்கை அரசியல் யாப்பில் அப்படி தமிழ் மொழி பேசுபவர் வரக்கூடாது என்ற எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை.சிங்கள ஆட்சியாளர்களால் இந்த வாய்ப்பு அல்லது உரிமை தமிழர்களுக்கு திட்டமிட்டே மறுக்கப்பட்டு வருவதை எடுத்து நோக்கலாம்.
யாப்பில் உள்ள வாய்ப்பை கண்துடைப்புக்கு நடைமுறைப்படுத்துவதற்காகவே தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்து வருகின்றது.
இதன் நரித்தனத்தை அந்த தந்திரோபாயத்தை தமிழ் கல்விப்புலமும் பொருளாதார வலுமிக்கவர்ளும் உண்ரந்து கொள்ளவில்லை என்பதற்கு கடந்த காலத்தின் பல நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.
அழித்தொழிப்புக்கள்
யாழ்ப்பாண பொது நூலகம் 1981 மே 31 இல் சிங்கள அமைச்சரின் ஆதரவுடன் சிங்கள மக்களால் தீக்கிரையாக்கப்பட்டதும் தமிழர்களின் புத்திசாலித்தனத்தின் மீதான ஆதங்கத்தின் வெளிப்பாடே!
அதாவது புதிய தமிழ் புலிகள் தங்களை தங்களின் அறிவு ஆற்றிலின் அடித்தளத்தில் இருந்து கொண்டு தான் தங்களை சீரமைத்துக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளாக பரிணமித்துக்கொண்டனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆற்றல் அறிவியல் மீதும் அவர்களின் செயற்றிறன் மீதும் கொண்டிருந்த அச்சம் தான் அவர்களை பயம் கொள்ளச் செய்தது.
ஆக்கிரமிப்புக்கு எதிரான புத்திசாலித்தனமான ஒரு முன்னெடுப்பை செய்து கொள்வதில் தமிழர்கள் வெற்றி கொண்டிருந்தனர் என்பது இந்த இடத்தில் உண்மையாகும்.அதனை சிங்களவர்களும் நன்றே அறிந்து வைத்துள்ளனர்.அந்த அறிதலின் வெளிப்பாடே யாழ் நூலக எரிப்பு ஆகும்.
அச்சத்தின் ஆர்ப்பரிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆரம்பத்தில் இருந்தே அழித்து விடுவதில் இலங்கை ஆட்சியாளர்களின் முனைப்பினையும் செயற்பாடினையும் பின்வரும் சில உதாரணங்களுடன் ஒப்பிட்டு நோக்கலாம்.
கம்சன் என்ற அரசனுக்கு அவனது தங்கை தேவகிக்கு பிறக்கப்போகும் ஆண் குழந்தையால் அழிவு என்ற எதிர்வு கூறலால் கம்சனின் தங்கையாகிய தேவகியின் ஒவ்வொரு குழந்தைகளையும் கொன்றிருந்தான் கம்சன்.
இருந்தும் கண்ணன் தப்பித்துக் கொண்டான். ஈற்றில் எதிர்வு கூறல் போலவே கண்ணனால் கம்சன் அழிக்கப்பட்டிருந்தான்.
அது போலவே யேசுவின் பிறப்பும் அதனால் யேசுவை அழிப்பதற்காக இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று விட கட்டளையிட்டிருந்த ஏரோது மன்னனையும் இங்கே நோக்கலாம்.
இவற்றிற்கெல்லாம் காரணம் தங்களுக்கு ஏற்படவிருந்த அழிவை தடுத்து விடுவதில் காட்டிய முனைப்பே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால எழுச்சியின் போது இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளும் இதுபோலவே அமைந்திருந்தன.
ஆக மொத்தத்தில் புதிய தமிழ் புலிகள் அமைப்பின் பெயர் 1976 மே 05 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயர் மாற்றத்துடன் ஈழத்தில் பாரியளவிலான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன.
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினை உலகளவில் கொண்டு சென்று சேர்த்ததோடு இலங்கையில் தமிழர்கள் மீது அரச இயந்திரத்தினால் பிரயோகிக்கப்படும் ஆக்கிரமிப்பு அழிப்பையும தமிழர்களின் இருப்பின் மீதான அச்சத்தையும் கொண்டு சேர்ந்திருந்தது என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
