சர்வதேச கண்காணிப்பு குழுவுக்கு அழைப்பு விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தல்
எதிர்வரும் தேர்தல்களுக்கு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்களை அழைக்குமாறு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவை அழைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
“தற்போது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல தேர்தல்களில் தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 2024 அக்டோபர் 17-ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும் உங்கள் தலைமையிலான தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரமும் பொறுப்பும் இருப்பதால், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதிளை மாற்றுவதற்கான சாத்தியம் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.
தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கு, வேட்புமனு தாக்கல் காலம் மற்றும் பிரச்சார காலம் ஆகியவற்றை நடைமுறையில் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் வேட்புமனு மற்றும் பிரச்சார காலங்களை பரிசீலித்து தேர்தல் அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்.
எதிர்வரும் தேர்தலில் கடும் போட்டியை எதிர்பார்க்கலாம். மேலும், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமும் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வேட்பாளர்கள் முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால், வரும் தேர்தல் மிகவும் பரபரப்பான சூழலை எதிர்கொள்ளும்.
எனவே, இந்த ஆண்டுக்கான தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு குழுவை அழைப்பதற்கு, தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சர்வதேச கண்காணிப்பு குழுவை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை, இதனால் அவர்கள் தங்களை தயார்படுத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கும்.
எனவே, சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கான அழைப்பிதழ்களை உரிய நேரத்தில் அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |