இலங்கையில் புதைத்து வைத்திருந்த ஆபத்தான இரசாயனம் - சிக்கிய அரசியல்வாதி - சிக்கலில் மகிந்த கட்சி
இலங்கையில் மீட்கப்பட்ட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தும் இரசாயனம் மீட்கப்பட்டமையின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்தெனிய - தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 கிலோகிராம் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அவை கெஹெல்பத்தர பத்மேவால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பெக்கோ சமன் தெரிவித்துள்ளார்.
இரசாயனங்கள்
இந்த இரசாயனங்கள் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரரால் மறைத்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே கட்சியில் போட்டியிடும் ஒருவருக்கு பெக்கோ சமன் இந்த இரசாயனங்களை வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பெக்கோ சமனை மித்தெனியவிற்கு அழைத்து வந்த நிலையில், அச்சமடைந்த முன்னாள்பிரதேச சபை உறுப்பினரும் அவரது சகோதரரும் வேறொரு இடத்திலிருந்து இரசாயனங்களை கொண்டு வந்து மித்தெனியவில் புதைத்துள்ளனர்.
மகிந்தவின் கட்சி
நேற்று அந்த இடத்தில் கொன்கிரீட் வைத்து மூடவும் தயாராகி வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த இரண்டு சகோதரர்களும் அந்தப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்ட இரசாயனங்களை பயன்படுத்தி சுமார் 200 கிலோகிராம் ஐஸ் தயாரித்திருக்கலாம். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் வருமானம் பெறலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



