கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள்
சீரற்ற கால நிலையின் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரிழ் மூழ்கி நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கன மழை காரணமாக தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது இதனால் நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், பாலம் போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அதிகளவான நீர் தேங்கி நிற்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை
மேலும். பெய்து வரும் கனமழை காரணமாக, திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள காளிபாஞ்சான் ஆறு பெருக்கடுத்துள்ளதால், சூரங்கல் மற்றும் வன்னியனார்மடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு 21 நாட்களே கடந்த நிலையில், வயல் காணிகளை வெள்ள நீர் மூடியுள்ளது. மூன்று நாட்களுக்கு மேலாக இந்த வெள்ளம் சிறு பயிரை மூடியிருப்பதால் , இந்த வயல் நிலங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
“வெள்ளம் வடிந்தோடிய பிறகு, இந்த நிலங்களில் மீண்டும் புதிதாக விதைக்க வேண்டும். நாங்கள் கடன்பட்டு, அடகு வைத்து இந்த வேளாண்மையை செய்தோம். மீண்டும் செய்வதென்றால் எங்கே போவது?
அரசாங்கமே எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாவலி கங்கை பெருக்கக்கூடிய ஆபத்து
அத்தோடு, கனமழை காரணமாக, மகாவலி கங்கை பெருக்கக்கூடிய ஆபத்து இருப்பதால், மகாவலி கங்கை சங்கமிக்கின்ற திருகோணமலை கொட்டியார குடாவை அண்டிய பகுதியில் வாழுகின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
உப்பாறு, பூவரசன்தீவு மற்றும் சமவாஜதீவு ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களே அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உயர்தர பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேல் கொத்மலை,
மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்நிலையில், மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 26.11.2024 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
செய்தி - திருமால்
மட்டக்ளப்பு
தற்போது பெய்துவரும் வடகீழ் பருவப் பெயற்சி மழை காரணமாக மட்டக்ளப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல கிராமங்களின் உள் வீதிகளும் வெள்ள நீராமல் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பபுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ருசாத்
முல்லைத்தீவு
தண்ணிமுறிப்பு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் தண்ணிமுறிப்பு குளத்தின் வான்கதவுகள் இன்று (26) பிற்பகல் முத்துஐயன் கட்டு நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் மஞ்சுளா யொய்ஸ்குமார் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் நேரடியாக குளபகுதிக்கு சென்று பார்வையிட்டதன் பின் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 17" அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
செய்தி - ஷான்
ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்
பலத்த மழை சிறிய குளங்கள் நிரம்பி வழிகின்றன, பிரதாக குளங்களும் வான்வாய்கின்றன வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது பெய்து வருகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி தருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிவதுடன், பிரதான குளங்களும் வான் வாய்ந்து வவதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பழுகாமம், பெரியபோரதீவு, வெல்லாவெளி, பொறுகாமம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருமண்வெளி, உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள் சிறி குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிகின்றன.
செய்தி - ருசாத்
இரணைமடு குளம்
இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் என வெள்ளமுன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பகல்வரை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளம் 27 அடியை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, தெரிவித்துள்ளது.
மேலும். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்கள் நிறைந்து வருகின்றது. பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்கும் ஆகியன வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி - எரிமலை
முத்தையங்கட்டு குளம்
முத்தையங்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்தையங்கட்டு குளத்திற்கான நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் முத்தையங்கட்டு குளத்தின் வான்கதவுகள் இன்று (26) பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் திறந்து விடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |