கோட்டாபயவுக்கு பயணத் தடை விதித்ததும் பொங்கி எழும் அரசியல்வாதிகள் - ஆளும் தரப்பு சீற்றம்
கடந்த 90 நாட்களாக சுரேஸ் சாலே தடுப்புக் காவலில் இருந்த போது இவர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால், சுரேஸ் சாலேவிடம் நடத்தப்படட விசாரணைகளின் பின்னர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் இந்த அரசியல்வாதிகள் அனைவருக்கும் குழப்பமடைய ஆரம்பித்துவிட்டனர் என பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(09.06.2026) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சாலேக்கு அநியாயம் செய்து விட்டதாக
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யார் இந்த அரசியல்வாதிகள் என்றால், தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானின் சட்டத்தரணியான உதய கம்மன்பில.
ஆனால், அந்த சட்டத்தரணியை ஒரு நாளும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகி பார்த்ததில்லை.

உதய கம்மன்பில நான்தான் பிள்ளையானின் சட்டத்தரணி என்று ஓடி வந்தார். கடந்த காலங்களில் தனித்து பிரிந்திருந்த இந்த அரசியல்வாதிகள், தற்போது சுரேஷ் சாலே என்றதும் நாங்கள் எல்லாம் நண்பர்கள் என்று ஒன்று திரண்டு விட்டனர்.
சுரேஷ் சாலேக்கு நாங்கள் மிகப்பெரிய அநியாயம் செய்து விட்டதாக அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கூறுவது போன்று எந்தவொரு அநீதியும் சுரேஸ் சாலேக்கு இழைக்கப்படவில்லை.
சுரேஸ் சாலேவுக்கு உணவு தரவில்லை என்பது இவர்களது பெரிய முறைப்பாடு. சோறோடு முள்ளங்கி கறி மாத்திரம் தருவதாக ஒருவர் கூச்சலிட்டு கொண்டிருக்கின்றார்.
உங்களுக்கு வேண்டிய அளவு நீங்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு வெளியிடலாம். அது உங்களுடைய உரிமை. அரசாங்கத்திற்குப் பிரச்சினையில்லை.
ஆனால், எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும், திருடர்களைப் பிடிப்பதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிக்கு எதிராக நடவடிக்கை நாம் எடுப்பதற்கும் நாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.