ஒரு மில்லியனுக்கும் அதிகமான சம்பளத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு: மனுஷ நாணயக்கார தகவல்
பராமரிப்புத் துறையில் தற்போது அதிக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் காணப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பராமரிப்புத் துறையில், சமூக பராமரிப்பு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பாளர்கள், வீட்டு செவிலியர்கள், செவிலியர் உதவியாளர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் போன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
வேலை வாய்ப்புக்கள்
இந்த வேலை வாய்ப்புக்கள், முக்கியமாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வழங்கப்படுவதுடன், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளிலும் கணிசமான அளவு வாய்ப்புகள் வழங்கபடுகின்றன.
தற்போது 27,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள் தனியார் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டாலும், மொழித் தடைகள் காரணமாக தகுதியான வேலையாட்களை அடையாளம் காண்பதில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
இதேவேளை,சில நாடுகள் 250,000 ரூபாய் முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சம்பளத்தை பராமரிப்புத் துறை சார்ந்த வேலையாட்களுக்கு வழங்குகின்றன.”என தெரிவித்துள்ளார்.