வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள்: அமைச்சர் மனுஷ
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (14.07.2023) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அதிகளவான மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
வெளிநாடு செல்பவர்கள் சட்டரீதியாக செல்லாது, அங்கு சென்று பல இன்னல்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம்.
நடவடிக்கை எடுக்க முடியும்
யாழ்ப்பாணத்தில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. வெளிநாட்டுக்கு அனுப்பவுதாக சட்டவிரோத நபர்கள் பணமோசடிகள் செய்கின்றனர்.
இவற்றை ஊடக செய்தியாக மட்டும் வெளியிடாமல், அமைச்சுக்கும் அது தொடர்பில் முறைப்பாடுகள் அளிக்கும்போதே நடவடிக்கை எடுக்க முடியும்.
அதனூடாகவே ஏனையவர்களையும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.
தென்மாகாணத்தில் மோசடிகள் பற்றி சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைகள்
பாதிக்கப்பட்ட சம்பவங்கள், ஏமாற்றியவர்கள் தொடர்பில் பதிவுகளை வெளியீடுகின்றனர். ஆனால் வடமாகாணத்தில் அவ்வாறு செய்வது மிக குறைவாகும்.
அதேவேளை, தமிழில் உங்களோடு உரையாட முடியாதமைக்கு மனம் வருந்துகிறேன். அதற்கு நான் காரணமல்ல முன்னர் இருந்த அரசியல்வாதிகள் எங்களை பிரித்து விட்டார்கள்.
வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பிரச்சினைகள் நாம் சகோதரத்துவம் இல்லாமல்போனதற்கு அரசியல்வாதிகளே காரணம்.
மக்களின் காணி பிரச்சினை
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படலை. இந்த பிரச்சினைக்கு காரணத்தை கண்டறியாமல், சர்வதேசத்திற்கும், மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கும் என ஏதோ சாட்டுக்களை கூறிக்கொள்கின்றனர்.
தற்போது ஜனாதிபதி இவற்றை தீர்க்கும் முகமாக வடபகுதி மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதவாதம், இனவாதம் என பிரிந்து வாழாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
டக்ளஸின் கருத்து
அத்துடன், தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போன்று நிதானமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும்.
மேலும், இந்த நாட்டில் வாழுகின்ற அனைவரும் தங்களுடைய கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அதேவேளை, இனம், மொழி, மதம், நிறம் போன்ற அனைத்து விடயங்களையும் கடந்து இலங்கையர்களாக சவால்களை எதிர்கொள்ளுகின்ற போதே, இந்த நாட்டின் எதிர்காலத்தினை வளமானதாக மாற்றியமைக்க முடியும்.
இந்த நிலையில், மொழியின் பெயரால் அரசியல்வாதிகள் சிலரினால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் வெளியிடுகின்ற கருத்துக்கள் நிதானமானவையாக அமைய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் கதை ஒன்றினை தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார,
குறித்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிடுகின்ற கருத்துக்கள் மிகவும் நிதானமானவை எனவும் அவ்வாறான பக்குவமே இந்த நாட்டிற்கு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
