இந்தியாவில் தேர்தலுக்கு பின்னரான கருத்துக்கணிப்புகள்
இந்திய (India) மக்களவை தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி இந்த கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் நாளை வெளியாகும் உத்தியோகபூர்வ முடிவுகளுக்கு பின்னர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருவதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
எனினும், குறித்த கருத்துக்கணிப்புக்கள் இந்திய பிரதமர் மோடியின் (Modi) ஊடகங்களின் கருத்துக்கணிப்புக்கள் எனவும் தாம் 295 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனவும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நம்பிக்கை அறிவிப்பை தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது.
வாக்களிப்பு எண்ணிக்கையில் சாதனை புரிந்த இந்தியா : உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் 20 மணித்தியாலங்களில்
உத்தியோகபூர்வ முடிவுகள்
இந்தநிலையில், தமிழக செய்தியாளர் ஒருவர், இந்த கருத்துக்கணிப்புக்களை காட்டிலும் நாளை வெளியாகும் உத்தியோகபூர்வ முடிவுகள் வரை காத்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் குறித்த செய்தியாளர் தெரிவிக்கையில்,
தேர்தலுக்குப் பின்னரான கருத்துக்கணிப்புகள் நம்பகத்தன்மையாக இல்லை. அதன்மீது பல சந்தேகங்கள் உள்ளன.
சில கருத்துக்கணிப்புக்களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலிருந்து 15 தொகுதிகள் வரை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் (Congress)கட்சி மொத்தம் 9 தொகுதிகளில் மாத்திரமே போட்டியிட்டது.
அதேபோன்று, பீகாரில் லோக் ஜன்சக்தி கட்சி மற்றும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 4 முதல் 6 தொகுதிகள் கிடைக்கும் என்று ஒரு புகழ்வாய்ந்த ஊடகம் கூறியுள்ளது.
தேர்தல் தொகுதிகள்
ஆனால், தேர்தலில் இந்தக் கட்சி 5 தொகுதிகளிலேயே போட்டியிட்டது. மேலும், ஹரியானாவில் 10 மக்களவைத் தொகுதிகள் தான் உள்ளன.
இருப்பினும், அங்கே பாரதீய ஜனதாவுக்கு 16 முதல் 19 தொகுதிகள் கிடைக்கும் என ஒரு ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பில் மொத்தம் 11 நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் 10 நிறுவன கணிப்புக்கள் பாரதீய ஜனதாவே ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளன.
கடந்த முறை மேற்குவங்கத்தில் இதுபோன்றே கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. 7 நிறுவனங்கள் பாரதீய ஜனதா அங்கே ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன.
எனினும், உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அதிக தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை அமைத்தார்.
உறுதியான முடிவு
அதேபோன்று, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்டார்.
இதன்போதும், பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. எனினும் நேர்மாறாக கெஜ்ரிவால் (Kejriwal) முதல்வராகப் பதவியேற்றார்.
இதன்மூலம், தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகள் என்பது உறுதியான முடிவு அல்ல என்பதை கடந்தகாலம் உணர்த்தியுள்ளது.
எனவே நாளை வெளிவரப் போகின்ற உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளே உறுதியானவை. அந்த முடிவில் எதுவும் நடக்கலாம்.
இதன்படி பாரதீய ஜனதாக்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கலாம். அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றலாம்
அப்படி இல்லையென்றால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூடப் போகலாம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.