ஒரு மருத்துவரை உருவாக்க 60 இலட்சம் ரூபாவிற்கும் மேல் அரசாங்கம் செலவிடுகின்றது
ஒரு மருத்துவரை உருவாக்க அரசு பொதுமக்களின் வரிப்பணத்தில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடுகிறது என கிராமிய வளர்ச்சி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே இன்று தெரிவித்துள்ளார்.
இன்று கிரிபத்த்கொட பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி துறையில், குறிப்பாக மருத்துவக் கல்விக்காக அரசு மேற்கொள்ளும் பெரியளவிலான முதலீட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவர்களை உருவாக்குவதற்கான செலவு, பிற தொழில்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒரு பொறியாளரை உருவாக்க அரசு சுமார் 30 இலட்சம் ரூபா செலவிடுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மருத்துவர்கள் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் பார்க்கப்பட்டுள்ளனர் எனவும், அந்த மரியாதையை பேணும் வகையில் அவர்கள் தொடர்ந்து சேவை புரிவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நிதியால் ஆதரிக்கப்படும் தொழில்களில் தரநிலைகள் மற்றும் பொறுப்புணர்வு பேணப்பட வேண்டியது அவசியம் என்பதையும் அமைச்சர் உபாலி பன்னிலகே தனது உரையில் வலியுறுத்தினார்.