பொருளாதார பிரச்சினை-30 வீதத்திற்கு மேல் அதிகரித்துள்ள மனநோயாளிகள்
பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களுடன் மன நோயாளிகளாக மாறியுள்ள நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது மற்றும் சிகிச்சைகளுக்கு வருவது சுமார் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனநோய் மேலும் அதிகரிப்பு
மனநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நபர்கள், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்து உட்கொள்வதை நிறுத்தி உள்ளதால், அவர்களின் மனநோய் மீண்டும் அதிகரித்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதை காண முடிகிறது.
இளைஞர்,யுவதிகளை பாதித்துள்ள மனநோய்
இலங்கையில் இருப்பதால், தமக்கு எதிர்காலம் இருக்காது என்ற விரக்திக்கு உள்ள இளைஞர்,யுவதிகள் மத்தியிலும் மனநோய் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத அழுத்தங்கள் மற்றும் விரக்திக்கு உள்ளாகி இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கு மத்தியில் மனநல பிரச்சினைகள் பெரும்பாலும் அதிகரித்துள்ளன.
இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்களை சமூகத்தின் மீது காட்டி வருகின்றனர். பலர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பெரியவர்களுக்கு மட்டுமல்ல பிள்ளைகளின் மன அழுத்தங்களும் அதிகரிப்பு
மேலும் பொருளாதார பிரச்சினைகள் உட்பட பல்வேறு சிக்கல்கள் காரணமாக வயது வந்தவர்கள் மாத்திரமல்லாது, பிள்ளைகளின் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.
பல்வேறு காரணங்களினால் தமது கற்றல் நடவடிக்கைகளை உரிய காலத்தில் செய்துக்கொள்ள முடியாத நிலையில் பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் இணைய வழி கற்பித்தல் காரணமாக அலைபேசிகளுக்கு அடிமையாகி போன பிள்ளைகளில் பெரும்பாலானோர் மனநோய்களுக்கு உள்ளாகி கஷ்டப்பட்டு வருவதாகவும் மருத்துவர் ரூமி ரூபென் மேலும் கூறியுள்ளார்.