இந்தியாவில் 100ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! வெளியாகியுள்ள தகவல்
வட இந்தியா முழுவதும் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்றையதினம்(2025-12-20) 100ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
நகரின் காற்று தரக்குறியீடு (AQI) 380 ஆக பதிவாகி, அது ‘மிகவும் மோசமான’ (Very Poor) நிலையை எட்டியுள்ளது.
விமானங்கள் ரத்து
இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 66 விமானங்களும், அங்கிருந்து புறப்படவிருந்த 63 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூடுபனி தொடர்ந்து சூழ்ந்துள்ளதால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கான ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விமானங்கள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு விமான நிலையம் இன்று முன்னதாக பயணிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
பயணிகள் அசௌகரியம்
மூடுபனி காரணமாக விமானத்தை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பல விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இன்று விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கவிருந்த பல பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், இதன் காரணமாக தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதியிலும் மக்கள் தங்களது வாகனங்களில் ஒளிவிளக்குகளுடன் பயணித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
