வவுனியா மேயர் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் வெளி மாவட்ட வீரர்கள்
ஏனைய மாவட்டத்தின் சிறந்த வீரர்கள் உள்வாங்கப்படுகின்ற போது எங்களுடைய மாவட்டத்திலும் சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள் என்ற நோக்கத்துடனேயே மேயர் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் வெளி மாவட்ட வீரர்கள் உள்வாங்கப்படுவதாக வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.
வவுனியாவில் மேயர் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட வீரர்கள் பலரை புறந்தள்ளி வெளிமாவட்ட வீரர்கள் சிலரையும் உள்வாங்குவதாக தெரிவிக்கப்படும் விமர்சனத்திற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் வெற்றிகரமான ஒரு விளையாட்டு சமூகத்தை எங்களுடைய மாவட்டத்தில் உருவாக்குவதற்காக இதுவரை பிரிந்திருந்த இரண்டு உதைப்பந்தாட்ட சங்கங்களை ஒன்றாக்குவதற்காக ஒரே பாதையில் பயணிப்பதற்காகவே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளோம்.
தற்போது இரண்டு சங்கங்களும் ஒன்றாகி எட்டு கழகங்கள் போட்டியிடும் சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம்.
முக்கிய காரணம்..
இதன்போது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் அணிகளில் பங்கேற்பதற்கு நாங்கள் சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கின்றோம். அது ஏனெனில் மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் உள்ள மிகத் திறமையான வீரர்களோடு எங்களது மாவட்ட வீரர்களும் விளையாடுகின்ற போது அவர்களுக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் தொடர் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான உந்துதலாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் அதே போன்று எமது வீரர்களை உருவாக்கும் வகையில் எங்களுடைய கழகங்களும் செயல்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மூவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகின்றது.
வட மாகாணத்தில் இருந்து சிறந்த வீரர்கள் உள்வாங்கப்படுகின்ற போது எங்களுடைய மாவட்டத்திலும் சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள் என்ற நோக்கத்தோடு மாத்திரமே இதனை ஏற்பாடு செய்துள்ளோமே தவிர இதில் நாங்கள் எந்த கழகங்களையும் ஒதுக்கவில்லை. நாங்கள் கூகுள் விண்ணப்ப படிவத்தின் ஊடாகவே விண்ணப்பங்களை பெற்று இருக்கின்றோம்.
அதில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து எட்டு கழகங்களும் சுமார் 20 வீரர்கள் வீதம் எடுத்திருக்கின்றார்கள். 40 வீரர்கள் வரையில் அதில் எடுபடாத நிலமை உள்ளது.
ஆகவே தொடர்ச்சியாக நாங்கள் இவ்வாறான விளையாட்டுகளை நடத்துவதற்கு தீர்மானித்து இருப்பதன் பிரகாரம் அடுத்த டிசம்பருக்குள் நாங்கள் கழகங்களுக்கிடையில் போட்டிகளை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். இந்தப் போட்டியை அடிப்படையாக வைத்து நாங்கள் அடுத்த போட்டிக்கு நகர்வுகளும்" என தெரிவித்தார்.



