இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை எதற்கு! சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ள விடயம்
உயிர்களைப் பாதுகாப்பதற்கும் பிரஜைகளின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமே இலங்கை முன்னுரிமை வழங்குகின்றது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டுப் பிரஜைகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமே இலங்கை அரசாங்கம் முன்னுரிமையளிப்பதாக அமைச்சர் கெஹெலிய உலக சுகாதார ஸ்தாபனத்திடம் எடுத்துரைத்துள்ளார்.
அதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் (திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில்) நாட்டின் சனத்தொகையில் 20 வயதிற்கு மேற்பட்டோரில் 85.87 சதவீதமானோருக்கு முதலாம் கட்டத் தடுப்பூசியும் 61.94 சதவீதமானோருக்கு முதலாம் மற்றும் இரண்டாம்கட்டம் உள்ளடங்கலாக முழுமையாகத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசியப் பிராந்தியக்குழுவின் 74 ஆவது மாநாடு நேபாளத்தைத் தளமாகக்கொண்டு நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.
இணையவழியில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இம்மாநாடானது எதிர்வரும் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டின்போது பிராந்தியப் பணிப்பாளரின் அறிக்கை தொடர்பில் கருத்துவெளியிட்ட இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல,
உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கியதாகப் பணிப்பாளரின் அறிக்கை அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டதுடன் அதற்குத் தனது பாராட்டையும் வெளிப்படுத்தினார்.
அதேவேளை கொவெக்ஸ் செயற்திட்டத்தின்கீழ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளல் உள்ளடங்கலாக கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட உதவிகளுக்கும் இதன்போது நன்றி தெரிவித்தார்.
மேலும் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் பிரஜைகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமே இலங்கை முன்னுரிமை வழங்குகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், அதற்காக தடுப்பூசி வழங்கல் மற்றும் பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை ஒன்றிணைத்த வழிமுறையொன்றைக் கையாள்வதாகவும் குறிப்பிட்டார்.