தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு
தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (23.02.2025) மன்னார் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடற்படையினரால் கைது
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 கடற்தொழிலாளர்கள் அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுகளுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று (23) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.





