கிராம சேவையாளரை அச்சுறுத்திய நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவட்டித்திடல் பழைய கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரைக் கனரக வாகனத்தால் மோத முயற்சித்து அச்சுறுத்திய சாரதியை 14 நாள் தடுப்பு விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி சட்டவிரோத மண்ணகழ்வை கட்டப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரைக் கனரக வாகனத்தால் மோத முயற்சித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சட்டவிரோதமாக மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த அதேவேளை, பல்வேறு தரப்பினருக்கும் பொது மக்களால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் சட்ட விரோதமாக மணல் குவிக்கப்பட்டு கனரக வாகனத்தில் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் கிராம சேவையாளர் ரி.கலைரூபனுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்த கிராம சேவையாளர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.
இதன்போது சாரதி உட்பட 6 பேர் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுடன் பேசிய கிராம சேவையாளருக்கு ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்த குறித்த குழுவினர், பின்னர் கனரக வாகனத்தினால் கிராம சேவையாளரை மோத முயற்சித்துள்ளனர்.
குறித்த கனரக வாகனத்திற்கு அனுமதிப்பத்திரம் ஏதும் இருந்திருக்கவில்லை எனவும், அப்பகுதி மணல் அகழ்விற்கு ஏற்ற அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை எனவும் தெரிவிக்கும் கிராம சேவையாளர், தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் பெயர் பலகையுடன் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாகனத்தின் சாரதி ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், தன்னை அச்சுறுத்திய குறித்த செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது பிரதேசத்தில் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருந்த தர்மபுரம் பொலிஸார் , குறித்த சாரதியை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
விசாரணையை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி,
குறித்த சந்தேக நபரை 14 நாட்கள் தடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு
உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan