புதிய அதிபர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்
அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய போட்டிப் பரீட்சையை நடத்தாமல் 2019ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பைத் தடுத்து நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரண்டாம் தர ஆசிரியரான புத்தாங் கோட்டே சுமணச்சந்திர தேரரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று(28.06.2023)விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான ஆட்சேர்ப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 3882 பரீட்சாத்திகளில் 1918 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
4718 அதிபர் வெற்றிடங்கள்
இதேவேளை, 4718 வெற்றிடங்களை நிரப்புவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாகவும், இதனால் ஏனைய பரீட்சார்த்திகளுக்கு அநீதி ஏற்படும் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததோடு, இந்த மனு நவம்பர் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |