ஹரின் பெர்னாண்டோ செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு
2021 செப்டெம்பர் முதலாம் திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட மாட்டார் என்று சட்ட மா அதிபர் இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தம்மை கைது செய்வதைத் தடுக்க கோரி ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தடை உத்தரவு இன்று நீடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, ஏப்ரல் இறுதியில் அவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக தம்மை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் பின்னர் அவர் குற்றவியல் புலனாய்வுத்துறை முன் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைக்கும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்திற்கு முன்னர் அளித்த அறிக்கைக்கும் முரண் இருப்பதாக கூறியே குற்றப்புலனாய்வு துறையால் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை ஹரின் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் அண்மையில் தமது அதிருப்தியை எழுப்பியது.
பெர்னாண்டோவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.