இராணுவத்திற்கு பைசர் தடுப்பூசி அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு
பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இராணுவத்திடம் ஒப்படைக்கும் செயற்பாட்டிற்கு முன்னணி வைத்திய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை, பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தடுப்பூசி வழங்கும்போது, தடுப்பூசி வழங்கும் முறை, மற்றும் தடுப்பூசிகளின் விநியோகம் சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இது தொடர்பில் அனைத்துத் தீர்மானங்களும், பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் எஸ்.எம் ஆர்னோல்ட் தலைமையில் தொற்றுநோயியல் பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
"பைசர் தடுப்பூசியை இராணுவம் அல்லது இராணுவத்திற்கு மாத்திரம் கொடுக்கும் தீர்மானத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இராணுவத்திற்குத் தடுப்பூசியை வழங்குவதானால், போரின் போது சுகாதாரத் துறைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நிபுணர் நவீன் டி சொய்சா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பினை துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்துள்ளது. "இந்த முறைகேட்டை விரைவில் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி நேற்றைய தினம் (31) சுகாதார அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம்.”
இலங்கையின் தடுப்பூசி திட்டம் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாகவும், இது வளர்ந்த நாடுகளின் நிலைக்குச் சுகாதார குறி காட்டிகளைக் கொண்டு செல்ல உதவிய ஒரு முறையாகும் எனவும், எனினும் கோவிட் தடுப்பூசி செயற்பாட்டின் போதான இந்த செயற்பாடானது முறையற்ற ஒரு செயற்பாடு எனவும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் நோய் ஒரு பொதுச் சுகாதார அவசரநிலை எனவும், அதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப அறிவு சுகாதாரத் துறைக்குக் காணப்படுவதாகவும், தடுப்பூசி திட்டம் மற்றும் தொற்றுநோய் பற்றிய தொழில்நுட்ப தீர்மானங்களை தொற்றுநோயியல் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சே மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் இரண்டு விசேட வைத்தியர்களின் ஆலோசனைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதால், பிரச்சினைகள் ஏற்படுவதாக, சுகாதார அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி திட்டத்திற்குத் தலைமை தாங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் உட்படத் தொற்றுநோய் கட்டுப்பாடு உள்ளிட்ட ஆறு பிரதான பொறுப்புகள் குறித்து ஆறு நிபுணர் குழுக்கள் நிறுவப்பட வேண்டுமெனவும், பொதுச் சுகாதார பதில் பணிப்பாளர் நாயகத்தின், நேரடி மேற்பார்வையின் கீழ் அவை செயற்பட வேண்டுமெனவும், அந்த சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதாரத் துறையினர் வழங்கிய தலைமைத்துவத்தின் அடிப்படையிலேயே, இலங்கையின் தடுப்பூசி திட்டம் மாத்திரமன்றி சுகாதாரத் துறையும் சர்வதேசப் பாராட்டினைப் பெற்றதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
