ஆளும் தரப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டணிக்கு வியூகம்!: வாசுதேவ நாணயக்கார தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களை கொண்ட எதிர்க்கட்சியினர் புதிய கூட்டணியை அமைக்கவுள்ளனர் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"தற்போதைய அரசாங்கத்துடன் நாம் இணைந்து செயற்படப்போவதில்லை. அரசின் சில பதவிகளுக்காக எதிர்க்கட்சியில் சிலருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
எமக்கு அழைப்பு கிடைக்கவில்லை
எவ்வாறாயினும், எமது தரப்பினருக்கு அதற்கான எந்த அழைப்பும் கிடைக்கவில்லை.
மேலும், அழைப்பு கிடைத்தாலும் அரசின் எந்தவொரு பதவியையும் நாம் பொறுப்பேற்க போவதில்லை.
ஆளும் கட்சி கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லையா என சிலர் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
நாம் எதிர்க்கட்சியில் இருப்பதால் ஆளும் கட்சி கூட்டத்துக்கு சமூகமளிப்பது எப்படி? மேலும், நாம் ஆளும் கட்சி கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம்" என தெரிவித்துள்ளார்.