நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
கம்பஹா நீதிமன்ற நீதவான் பந்துல குணரட்ன திடீர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளளன.
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தைரியமாக தீர்மானம் எடுத்த நீதவானை இடமாற்றம் செய்வது அநீதியானது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா நீதவான் சரியான தீர்மானம் எடுத்தார் எனவும் கடத்தல்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சரியானது எனுவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதவானின் அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தி முதுகெலும்புடன் நேர்மையான தீர்மானங்களை எடுத்துள்ளார் என சாமர சம்பத் பாராட்டியுள்ளார். பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானம் எடுத்தார் என்ற அடிப்படையில் திடீரென இடமாற்றம் செய்ய முடியுமா என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் சட்ட விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை எனக் கூறிய போதிலும் நீதவான் எவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 21 நீதவான்கள் பணி இடைநீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் இவ்வாறான விடயங்களை யோசித்து செய்ய வேண்டுமென சாமர சம்பத் தசாநாயக்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீா்மானம் எடுத்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கடத்தல்களுக்கு எதிராக செயற்பட்ட நீதவான் இடமாற்றம் பெற்றுச் செல்ல நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுவா நாட்டின் சட்டம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் நீதவான் பந்துல குணரட்னவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினர் இவ்வாறா? நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்யப் போகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.