நெருக்கடிக்குள்ளாகியுள்ள எதிர்க்கட்சியினர்! அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு
"இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதைக் காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்குக் கீழ்த்தரமாகச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகின்றோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலப்பிட்டி – நுவரெலியா ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை நேற்று (12) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
சீரற்ற காலநிலை
"நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தால் மலையக ரயில் பாதைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. ரயில் பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரயில் திணைக்களத்தின் சேவையாளர்கள், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் சேதமடைந்துள்ள ரயில் பாதைகள் தற்போது கட்டம் கட்டமாகப் புனரமைக்கப்படுகின்றன. வெகுவிரைவில் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கமைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும். இயற்கை வளங்களை அழித்து குடியிருப்புக்களை அமைத்தால் அதன் பிரதிபலன் பாரதூரமானதாக அமையும் என்பதற்குத் தற்போதைய நிலைமை ஒரு எடுத்துக்காட்டாகக் காணப்படுகின்றது.
மலைகள், ஆறுகளை அண்டிய பகுதிகளில் குடியிருப்புக்களை அமைப்பது குறித்து இனி கடுமையான திட்டங்கள் செயற்படுத்தப்படும். தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் தோற்றம் பெறாத வகையில் நிலையான தீர்மானங்களைச் செயற்படுத்த வேண்டும்.
நெருக்கடிக்குள்ளாகியுள்ள எதிர்க்கட்சி
அனர்த்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ளதைக் காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அவர்கள் ஊடக சந்திப்புக்களை நடத்திக் கொண்டு குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் மீது அக்கறை இருக்குமாயின் எதிர்க்கட்சியினர் ஊடகங்களுக்கு மத்தியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சியினர் இந்தளவுக்குக் கீழ்த்தரமாகச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமை கவலைக்குரியது." - என்றார்.