ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன! மொட்டுக் கட்சி உறுதி
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
மொட்டுக் கட்சி
"ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற வகையிலேயே எமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்றது. கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நான் பங்கேற்றிருந்தேன்.
எமது கட்சிக்குரிய தனித்துவங்கள் மற்றும் கொள்கைகளை பாதுகாத்தபடியே நாம் பயணிக்கின்றோம்.
எனினும், நாட்டில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களை ஒடுக்கி, வடகொரியா போன்று ஜனநாயகம் அற்ற சூழ்நிலையை இங்கு ஏற்படுத்துவதற்கு பாரிய முயற்சி இடம்பெறுகின்றது.
இதற்கு ஓர் அங்கமாகவே அடக்குமுறை தலைவிரித்தாடுகின்றது. தமது கட்சி அலுவலகத்தில் இருந்தவர்களைப் பொலிஸுக்கு நியமித்து, தமது தேவைக்கேற்ப பொலிஸாரை பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். எனவேதான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.



