எதிர்க்கட்சியினர் நாட்டின் பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு
இந்த நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் மக்கள் இனமத மொழி பேதங்களை கடந்து அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதி மீதும் அதீத நம்பிக்கையுடன் பயணித்து வரும் நிலையில் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் நாட்டின் பல்வேறு இடங்களில் குழப்ப நிலைகளை ஏற்படுத்த முனைவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மன்னாரில் கடந்த ஆட்சிக் காலத்தில் காற்றாலை திட்டத்திற்கு ஆதரவு வழங்கி பிரசாரம் முன்னெடுத்தவர்களே ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையுடன் பயணிக்கும் மக்கள்
மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு அலை பெருகி வருவதுடன் நமது நாட்டு மக்களும் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். அது வடக்கு, கிழக்கு, மலையகம் அல்லது தெற்கு பகுதிகளாக இருக்கட்டும் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் இன மதம் மொழி கடந்து வேறுபாடுகளை கடந்து அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கையோடு பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இருந்தபோதிலும் எதிர்க்கட்சியினர் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் பலவிதமான குழப்புகின்ற செயல்பாடுகளை இந்த நாடு பூராகவும் மேற்கொள்கின்றனர். அதில் விசேடமாக மன்னார் பிரதேசத்தில் இந்த காற்றாலை விடயத்தினை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இதனை முன்னெடுத்து அதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் அந்த காற்றாலைகள் மீது அதீத நம்பிக்கையும் காற்றாலை செயல் திட்டத்திற்கு ஆதரவும் வழங்கி அதற்கான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டவர்கள் தான்.
எதிர்ப்பு தெரிவிக்கும் செயற்பாடு
இன்று அரசாங்கம் மாறுபட்டதன் பின், புதிய அரசு வந்ததன் பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றார்கள். அவர்கள் மாத்திரம் கிடையாது.
இந்த நாட்டில் பல இடங்களில் சில தொழிற்சங்கவாதிகளும் ஒன்று இணைந்து கொண்டு அரசை வீழ்த்துவதற்கான பல சதித்திட்டங்களை எதிர்க்கட்சியின் ஊடாக செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் மூலமாக நாட்டு மக்கள் எந்த விதத்திலும் குழப்பம் அடையவில்லை.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
அவர்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். இலங்கை வாழ் மக்கள் மாத்திரம் கிடையாது வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கையர்கள் கூட இன்று இந்த நாட்டின் மீதும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி மீதும் அதீத நம்பிக்கையுடன் அவர்கள் பயணிக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



